லிவர்பூல், ஏப்.1-
2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல மென்செஸ்டர் சிட்டிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.சனிக்கிழமை நடந்த பிரீமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 – 1 என்ற கோல்களில் எவெர்டனை வீழ்த்தியது. ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரீமியர் லீக் ஆட்டத்தில் தனது பரம வைரியான மென்செஸ்டர் யுனைடெட்டைத் தோற்கடிக்கும் பட்சத்தில் மென்செஸ்டர் சிட்டி பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல முடியும்.
குடிசன் பார்க் அரங்கில் நடந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா பலம் வாய்ந்த அணியை களமிறக்கினார். புதன்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை சந்திக்கவுள்ளது.எனினும் அந்த ஆட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எவெர்டனை வீழ்த்தும் முயற்சியில் பெப் குவார்டியோலா தனது முன்னணி நட்சத்திரங்களை களமிறக்கியிருந்தார்.
முதல் பாதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி தனது 3 கோல்களையும் போட்டு அதிரடி படைத்தது. லெரோய் சானே முதல் கோலைப் போட்ட வேளையில் கப்ரியல் ஜீசஸ் இரண்டாவது கோலைப் போட்டார். மென்செஸ்டர் சிட்டியின் மூன்றாவது கோலை ரஹீம் ஸ்டேர்லிங் அடித்தார். இந்த ஆட்டத்தில் எவெர்டனின் ஒரே கோலை யானிக் பொலாசி போட்டார். லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் மென்செஸ்டர் சிட்டி 16 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளது.

