Site icon அநேகன்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம் – மீண்டும் வெற்றி பாதையில் ஹரிமாவ் மலாயா!

கோலாலம்பூர், ஏப்.2 –

அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் மலேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா 7 – 0 என்ற கோல்களில் பூத்தானை வீழ்த்தியது. கடந்த 12 அனைத்துலக ஆட்டங்களில் வெற்றி பெற தவறிய ஹரிமாவ் மலாயா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பை ஏற்ற டான் செங் ஹோவும் தனது முதல் வெற்றியை ருசித்துள்ளார்.

ஆக கடைசியாக 2016 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் கம்போடியாவுக்கு எதிராக மலேசியா வெற்றி பெற்றிருந்தது. தற்போது 16 மாதங்களுக்குப் பிறகு மலேசியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. உலகத் தரவரிசையில் 188 ஆவது இடத்தில் இருக்கும் பூத்தான் முழுக்க முழுக்க பகுதி நேர தொழில்முறை கால்பந்து ஆட்டக்காரர்களை களமிறக்கியது.

முதல் பாதி ஆட்டத்திலேயே மலேசியா ஐந்து கோல்களைப் போட்டு அதிரடி படைத்தது. 11 ஆவது நிமிடத்தில் வான் சேக் வான் நோர் முதல் கோலைப் போட்ட வேளையில் சாக்குவான் அடா, இர்பான் சக்காரியா 19, 27 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டனர்.

36, 40, 54 ஆவது நிமிடங்களில் சாக்குவான் அடா மேலும் மூன்று கோல்களைப் போட்டு ஹரிமாவ் மலாயா அணியை 6 – 0 என்ற நிலையில் வைத்தார். 74ஆவது நிமிடத்தில் ஷாபிக் அஹ்மாட் போட்ட கோல் மலேசியாவின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது.

Exit mobile version