கப்பளா பத்தாஸ், ஏப். 2-
– கப்பளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்தியர்களின் வற்றாத ஆதரவைப் பெற்றுள்ள டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிக்கான், அண்மையில் பெர்த்தாம் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியுள்ளார்.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி கப்பளா பத்தாஸ் மைபிபிபி தொகுதியின் ஆண்டுக் கூட்டத்துக்கு வருகை தந்த டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிக்கானிடம், பெர்த்தாம் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் கோரிக்கை ஒன்றை வழங்கியிருந்தனர்.
அதில் ஆலயத்துக்கு கூடாரங்கள், மேசை , நாற்காலிகள் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற டத்தோ ஸ்ரீ ரீசால் , அதற்கு மறுநாளே தமது நாடாளுமன்ற சேவை மையத்தின் வழி 10 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கினார்.
இந்த நிதியின் மூலம் இரண்டு கூடாரங்கள், 80 நாற்காலிகள், 40 மேசைகளும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டதாக கப்பளா பத்தாஸ் மைபிபிபி தொகுதித் தலைவர் வேலாயுதம் தெரிவித்துள்ளார். இங்குள்ள மக்களின் தேவைகளை உடனடியாக தீர்த்து வைக்கும் பண்பைக் கொண்டுள்ள டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிக்கான், இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு கிடைத்த ஒரு சிறந்த தலைவர் என வேலாயுதம் புகழாரம் சூட்டினார்.
அதேவேளையில் தொகுதியில் உள்ள இந்தியர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றும் ரீசால் வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என வேலாயுதம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

