Site icon அநேகன்

என் சேவைகளை புறந்தள்ளி சிறுமைப்படுத்தும் தமிழ் ஊடகங்கள்! டத்தோ ப.கமலநாதன்

கோலாலம்பூர், ஏப். 2-
துணைக்கல்வியமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இந்நாட்டிலுள்ள இந்திய மாணவர்களின் நன்மைக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வந்துள்ளேன். ஆயினும், எனது சேவையை சில தரப்பினர் சிறுமைப்படுத்தி வருவதாக துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் தம்மை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதால் அமைதியான முறையில் வேலை செய்ய நினைக்கும் என்னை பேசுவதற்கு தூண்டுவதாகவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்த நிலையில் கடந்தாண்டு 158 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.5 கோடி வெள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று லெம்பா பந்தாய், மலாய்மொழி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மேலும் 284 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.5 கோடி வெள்ளி ம.இ.கா. தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய டத்தோ கமலநாதன் தமதுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சிறிய சிறிய விவகாரங்களும் தேவையில்லாத விவகாரங்களும் சில தரப்பினர்களின் முக்கிய பேச்சாக உள்ளது. ஆனால், அவர்கள் யாருக்கும் எந்த நன்மையையும் செய்ததிலை. எனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

தமிழ்ப்பத்திரிக்கை ஒன்று என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது. குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறும் அவர்கள் நான் செய்கின்ற நல்ல காரியங்களை மட்டும் ஏன் கூற மறுக்கின்றனர்? கமலநாதன் என்பதாலா? இதுவரை நான் ஆற்றிய சேவைகளை நெஞ்சை நிமிர்த்தி கூறுவேன். தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் நிதிகளைக் கூட பொதுத்தேர்தலுக்காகத்தான் வழங்கப்படுவதாக குறை கூறுகின்றனர். பல ஆண்டுகளாக அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கி வருகின்றது. அப்போது எல்லாம் பொதுத்தேர்தல் இருந்ததா? என் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி விட்டு எனது கடமையை தொடர்ந்து ஆற்றுவேன் என டத்தோ கமலநாதன் சூளுரைத்தார்.

விளம்பரம்
Exit mobile version