Site icon அநேகன்

மரோன் பெல்லாய்னி எங்கும் செல்ல மாட்டார்!

ஒஸ்லோ, ஜூலை 31-
மன்செஸ்டர் யுனைடெட் அணியின் மத்திய திடல்தட ஆட்டக்காரர் மரோன் பெல்லாய்னி இப்பருவத்தில் அவ்வணியை விட்டு விலக மாட்டார் என அதன் நிர்வாகி ஜோசே மரின்யோ தெரிவித்தார்.

அதேவேளையில், செல்சியிலிருந்து மன்செஸ்டர் யுனைடெட்டில் 4 கோடி டாலர் மதிப்பில் இணையவிருக்கும் நெமஞ்சா மத்திச் குறித்த தகவலுக்காக தாம் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒஸ்லோவில் நடைபெற்ற வலேரெங்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜோசே மரின்யோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நெமஞ்சா மத்திச் குறித்து கூறுகையில், அவர் தற்போது யுனைடெட்டிற்கு அதிகம் தேவைப்படும் விளையாட்டாளர் ஆவார். அவரது தேவை அதிகமாக இருக்கும் நிலையில் மன்செஸ்டர் யுனைடெட்டில் அவருக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும். இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரையில் நான் இதுகுறித்து அதிகமாக கூற முடியாது. தற்போது யுனைடெட்டில் 31 எண் உள்பட பல ஜெர்சி எண்கள் காலியாக உள்ளதாக அவர் கூறினார்.

மரோன் பெல்லாய்னி கலாத்தாசாரே அணியில் இணையவிருப்பதாக கூறப்படும் ஆருடங்கள் குறித்து வினவப்பட்ட போது அவர் இந்த பருவத்தில் யுனைடெட்டிலேயே நீடிப்பார். அவரை வாங்கும் எண்ணத்தை அந்த அணி கைவிட வேண்டும். என்னை பொறுத்தவரையில் யுனைடெட்டிற்கு தேவைப்படும் விளையாட்டாளர்களில் பெல்லாய்னியும் ஒருவர் என ஜோசே மரின்யோ குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நெமஞ்சா மத்திச் யுனைடெட்டில் இணையும் வகையில் கேரிங்டனில் மருத்துவ பரிசோதணையை மேற்கொண்டார். அதோடு, இதற்கு முந்தைய பருவத்தில் யுனைடெட்டில் பஸ்டியன் ஸ்வேய்ன்டைகர் அணிந்த 31 எண் கொண்ட ஜெர்சியை அணிந்த நிலையில் நேமஞ்சா மாட்டிக் படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மன்செஸ்டர் யுனைடெட்டில் அவர் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேமஞ்சா மாட்டிக் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான முதல் ஆட்டமாக வருகின்ற 8ஆம் தேதி ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான சூப்பர் கிண்ண ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version