கோலாலம்பூர், ஜூலை 31-
புத்ரா ஜெயா சிறார் பாலியல் குற்றவியல் நீதிமன்றத்தில் 62 சிறார் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறார் நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை குறித்து பாரிட் சூலோங் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நோராய்னி அகமட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இம்மாதம் 4ஆம் தேதி அந்த நீதிமன்றம் தொடக்கப்பட்டதிலிருந்து இந்தப் புகார்கள் பெறப்பட்டதாக அஸாலினா குறிப்பிட்டார்.
தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள சிறார் பாலியல் குற்றவியல் நீதிமன்றம் ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா போன்ற இடங்களில் புகார் செய்யப்பட்டுள்ள வழக்குகளைச் செவிமடுக்கும். அந்த நீதிமன்றத்தில் வழக்குகள் முறையாகவும் விரைவாகவும் நடைபெற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறார்களும், சாட்சிகளும், குற்றவாளிகளும் எவ்வித அச்சமுமின்றி சாட்சியம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும் அஸாலினா தெரிவித்தார்.
