Site icon அநேகன்

360 தமிழ்ப்பள்ளிகளில் குறைந்த மாணவர்கள்

கோலாலம்பூர், ஜூலை 31-
நாடு முழுவதிலும் 360 தமிழ்ப்பள்ளிகளில் சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் 150க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 176 பள்ளிக்கூடங்களில் சராசரியாக ஒரு பள்ளியில் 20 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அப்பள்ளிகள் மூடப்படலாம் அல்லது இணைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் தெரிவித்தார்.

ஒரு பள்ளியில் 150க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் அது குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளி என அமைச்சு வகைப்படுத்துகின்றது. நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் நாடு முழுமையும் 2,996 பள்ளிக்கூடங்களில் சராசரியாக ஒரு பள்ளியில் 150க்கும் குறைவான மாணவர்களே உள்ளது தெரிய வந்தது. இவற்றில் 2,058 பள்ளிகள் தேசிய பள்ளிகளாகும். 578 பள்ளிகள் சீன ஆரம்ப பள்ளிக்கூடங்கள் ஆகும். 360 பள்ளிகள் தமிழ் பள்ளிக்கூடங்கள் ஆகும். இந்த ஆய்வில் 44 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே இருப்பதும் 132 பள்ளிகளில் 20 க்கும் குறைவான மாணவர்களே இருப்பதும் தெரியவந்துள்ளதாக மக்களவையில் சிபூத்தே தொகுதி தேமு உறுப்பினர் அகமது லாய் பூஜாங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

இந்தப் பள்ளிகளை மூட முடியுமா அல்லது மற்ற பள்ளிகளோடு இணைக்க முடியுமா என்பது பற்றி தீர்மானிக்க முழுமையான ஆய்வு நடத்தப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். தலைநகர் கோலாலம்பூர் ஜாலான் பசாரில் இருந்த 3 பள்ளிகள் மிகக் குறைந்த மாணவர்களைக் கொண்ட காரணத்தினால் இணைக்கப்பட்டுவிட்டன என்பதையும் அவர் தெரிவித்தார்.

பெற்றோர் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாறாக, அமைச்சு ஒரு பள்ளிக்கூடத்தை வலுக்கட்டாயமாக மூடிவிடாது அல்லது வேறு ஒரு பள்ளியுடன் இணைத்துவிடாது என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version