கோலாலம்பூர், ஆக.2 –
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கடந்த 1996 ஆம் ஆண்டில் அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டப் போது அவரின் சொத்து விவரங்களை தம்மிடம் அறிவித்தாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட் தமது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில் அவரது சொத்தாக அவரது வங்கிக் கணக்கில் 23 கோடி ரிங்கிட் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததாக மஹாதீர் கூறினார். “அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் 23 கோடி ரிங்கிட் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று நான் கேட்டதற்கு, அவரது பதில் தெளிவாக இல்லை.
“அவருக்கு ஞாபகம் இருக்குமானால், இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது என்பதை அவர் விளக்க வேண்டும்”, என்று மஹாதீர் அவரது இன்றைய வலைப்பதிவில் கேட்டுள்ளார்.
திங்கட்கிழமை மஹாதீர் வெளியிட்டிருந்த ஒரு தகவலில் சாஹிட் ஹமிடி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் மஹாதீரைச் சந்தித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் இடத்தை தாம் எடுத்துக்கொள்வதற்கு தமக்கு ஆதரவும் அனுதாபமும் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
