கோலாலம்பூர், ஆக.3-
சொந்தத் தொழில் செய்து வருபவர்களின் எதிர்கால நிதி நிலைமை சீராய் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎப்) ஒரே மலேசியா ஓய்வூதியத் திட்டத்தில் அவர்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என அதன் வியூகப் பிரிவு துணை நிர்வாக இயக்குநர் துங்கு அலி ஸாக்ரி ராஜா முகமட் அலியாஸ் வலியுறுத்தினார்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் வரி விதிக்கப்படாத அல்லது அரசால் கண்காணிக்கப்படாத தொழில்துறைகளில் ஈடுபடுபவர்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதால் அதிகாரப்பூர்வ அல்லது அரசு துறைகளைக் காட்டிலும் அவர்களுக்குப் பொருத்தமான பாதுகாப்புத் திட்டம் ஏதுமில்லை.
அவற்றில் ஆன்லைன் வேலை, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், கிரேப்கார் ஓட்டுநர்கள், தனிப்பட்டக் குத்தகையாளர்கள் (independent contractors), பகுதி நேரப் பணியாளர்கள் (freelancers) முதலானோரும் அடங்குவர்.
இத்தகைய தரப்பினர்கள் அவர்கள் செய்துவரும் வேலைகளிலிருந்து ஓய்வு பெறும் போது எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உறுதி செய்ய வேண்டியது முக்கியமாகும். நாட்டில் 70 விழுக்காட்டு மக்கள் நிதிக் கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர் என இபிஎப்பின் அனைத்துலக சமூகப் பாதுகாப்பு மாநாட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துங்கு அலி ஸாக்ரி குறிப்பிட்டார்.
