பாரிஸ், ஆக.4 –
பார்சிலோனாவின் உச்ச நட்சத்திரமான பிரேசிலின் நெய்மார், பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் ( பி.எஸ்.ஜி ) அணியில் இணைந்துள்ளார்.25 வயதுடைய நெய்மாரை வாங்க, பி.எஸ்.ஜி 22 கோடியே 20 லட்சம் ஈரோ டாலரை பார்சிலோனாவுக்கு வழங்கியுள்ளது.
இது கால்பந்து விளையாட்டில் ஓர் ஆட்டக்காரருக்கு வழங்கப்பட்ட உச்ச பட்சத் தொகையாக கருதப்படுகிறது.
இதற்கும் முன்னர் மென்செஸ்டர் யுனைடெட், பிரான்சின் போல் பொக்பாவை வாங்க 10 கோடி ஈரோ டாலர் வழங்கியதே அதிக பட்சத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் அதிகாரபூர்வகாக அறிமுகப்படுத்தப்பட்ட நெய்மார், இன்று நடைபெறும் பிரெஞ்சு லீக் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 3 கோடி ஈரோ டாலரை சம்பளமாக பெறும் ஒப்பந்தத்தில் நெய்மார் கையெழுத்திட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் இணைந்த நெய்மார் கடந்த 4 ஆண்டுகளில் பார்சிலோனா அணியில் 105 கோல்களைப் போட்டுள்ளார்.
பார்சிலோனாவுடன் இரண்டு ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணங்கள், இரண்டு ஸ்பெயின் லீக் பட்டங்கள், ஒரு ஐரோப்பிய சூப்பர் கிண்ணம் , மூன்று கோப்பா டெல் ரே கிண்ணங்களை நெய்மார் வென்றுள்ளார்.
Attachments area
