சென்னை, ஆக.4 –
தல அஜித் குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் விவேகம் திரைப்படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் தெரிவித்துள்ளார்.
விவேகம் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஏற்கனவே ” சர்வைவா ” ” நெவர் எவெர் “, காதாலானேன் பாடல்கள் வெளியிடப்பட்டன. எஞ்சிய மூன்று பாடல்களுடன் விவேகம் தீம் இசையும் திங்கட்கிழமை வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டு விவேகம் படத்தை தயாரித்துள்ள சத்ய ஜோதி பிலிம்ஸ் அந்த படத்தின் பாடல்களின் முன்னோட்டத்தை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளது. படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், தற்போது படத்தின் ஆல்பம் ப்ரிவியு வெளியிடப்பட்டுள்ளது.
சிவா – அஜித் காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் உருவாகியுள்ள படம் விவேகம். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரித்துள்ளனர்.
விவேகம் படத்துக்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்று வழங்கியுள்ளனர்.
