கிள்ளான், ஆக. 6-
இந்திய வாக்காளர்களை அதிகம் கொண்ட கோத்தா ராஜா தொகுதியில் ம.இ.கா. இரண்டு முறை தோல்வி கண்டது பெருத்த ஏமாற்றத்திற்குரியது என ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.
இந்நாட்டில் அம்னோவிற்கு அடுத்த நிலையில் மக்களுக்கு அதிகம் சேவையாற்றுகின்ற கட்சி ம.இ.கா. மட்டுமே. இதை நாம் மிக தைரியமாக சொல்லாம். இருந்தும் நாம் கடந்த 2 பொதுத்தேர்தல்களில் தோல்வி கண்டோம். இந்தியர் சார்ந்த கட்சிக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அதில் அர்த்தம் இல்லை.
இதற்கு ம.இ.கா மீதான மக்களின் கண்ணோட்டம் மிக முக்கியம். நாமும் மற்ற கட்சிகளைப் போல அரசியல் செய்ய வேண்டும். இன்று சமூகவலைத் தளம் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் ம.இ.காவை வசை பாடும்போது நாம் அவற்றிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இன்று ம.இ.கா. கோத்தா ராஜா தொகுதியின் 13ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறினார்.
இத்தொகுதியில் உள்ளூரைச் சேர்ந்தவரை வேட்பாளாராக நிறுத்தினால் ம.இ.காவினால் வெற்றி பெற முடியும். இது குறித்து கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் பேசுவேன். அதேவேளையில், கிளைத் தலைவர்களும் அடிமட்ட அளவில் களமிறங்கி ம.இ.காவின் வெற்றிக்காக போராட வேண்டும் என டத்தோ டி.மோகன் கேட்டுக்கொண்டார்.
இம்மாநாட்டில் பேசிய ம.இ.காவின் தேசிய பொருளாளரும் கெப்போங் தொகுதியின் தலைவருமான டத்தோஸ்ரீ சா.வேள்பாரி கூறுகையில், கடந்த 2 பொதுத்தேர்தல்களிலும் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியை ம.இ.கா. எதிர்கட்சியிடம் இழந்தாலும் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் அத்தொகுதியை ம.இ.கா. வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.
எதிர்கட்சியிலிருந்து பாஸ் கட்சி தற்போது பிரிந்து தனியாக இயங்கி வருகின்றது. அவ்வகையில் 14ஆவது பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிகழ்ந்தால் அது ம.இ.காவின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என அவர் கூறினார்.
டத்தோ ஆர்.எஸ்.மணியம் கூறுகையில், இத்தொகுதியை கைப்பற்றுவதற்கு தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கின்றன. இனிமேலும், நாம் ஒற்றுமை இல்லாமல் இருந்தோமானால் இந்த தொகுதி நம் கையை விட்டு நழுவி விடும். ஒற்றுமை அடிப்படையில் நாம் செயல்பட்டால் நிச்சயமாக வருகின்ற பொதுதேர்தலில் கோத்தா ராஜா தொகுதியை நாம் வெல்ல முடியும் என அவர் கூறினார்.
