பார்சிலோனா, ஆக. 8-
ஜோன் கேம்பர் கிண்ண ஆட்டத்தில் பிரேசிலின் சாபேகோஎன்சே அணியை எதிர்கொண்ட ஸ்பெயினின் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் மிகவும் உணர்ச்சிகரமான ஆட்டமாக விளங்கியது. காரணம், கடந்தாண்டு நவம்பர் மாதம் கோப்பா சூடாமெரிக்கானா கிண்ண இறுதி போட்டியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் அட்லெத்திகோ நேஷ்னல் அணியை எதிர்கொள்வதற்காக சாபேகோஎன்சே அணியின் விளையாட்டாளர்களும் பணியாளர்களும் சென்ற விமானம் எரிவாயு முடிந்ததால் கொளும்பியா, மேடலின் பகுதியிலுள்ள மலை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 77 பேரில் 71பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பார்சிலோனா சாபேகோஎன்சே அணியின் தோற்றுநரான ஜோன் கேம்பர் பெயரில் நட்புமுறை ஆட்டத்தில் பங்கேற்கும்படி அவ்வணிக்கு அழைப்பு விடுத்தது.
சாபேகோஎன்சே அணியின் மறுசீரமைப்புக்காக பார்சிலோனா இந்த ஆட்டம் வாயிலாக 250,000 யூரோ தொகையை நன்கொடையாக வழங்கவுள்ளது. சாபேகோஎன்சே அணியுடனான ஆட்டத்தில் அதன் கோல்களை ஜெராட் டியோலோபியூ, செர்ஜியோ பஸ்கேட்ஸ், லியோனல் மெஸ்ஸி, டெனிஸ் சுவாரேஸ் ஆகியோர் புகுத்தினர்.
இந்த ஆட்டம் எங்களால் மறக்க முடியாத உணர்ச்சிபூர்வமான ஆட்டமாக விளங்கியதாக பார்சிலோனாவின் நிர்வாகி எர்னேஸ்டோ வால்வேர்ட் தெரிவித்தார். இந்த ஆட்டத்தின் வாயிலாக அவ்வணியின் மறுசீரமைப்புக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்கியது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
