போர்ட்கிள்ளான், செப்.28
அண்மையில் விஷத்தன்மை கொண்ட மதுபானத்தால் அதிகமானோர் மரணமடைந்ததை தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 220 மதுபானக்கடைகளில் அரச மலேசிய சுங்கத்துறை அதிரடிச் சோதனை நடத்தியது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரச மலேசிய சுங்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் துளசி தெரிவித்தார்.
இந்தச் சோதனை நடவடிக்கையில் 400 லிட்டருக்கும் அதிகமான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பெண்கள் உட்பட 34 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.
தாமான் கிள்ளான், உத்தாமா கிள்ளானில் ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் தயாரித்த கும்பலையும் அதிகாரிகள் முறியடித்தனர். மெத்தனல் அடங்கிய கலன்களும், பிராந்தி கலவை கொண்ட கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

