Site icon அநேகன்

பேராவில் 3 சட்டமன்ற தொகுதிகளில் அம்னோவின் வெற்றி உறுதி

கோலாலம்பூர், செப். 28
நடந்து முடிந்த 14ஆவது பொதுத்தேர்தலில் பேரா மாநிலத்தின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அம்னோ வேட்பாளர்கள் பெற்ற வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தான் மெலிந்தாங், சங்காட் ஜோங் மற்றும் லூபோக் மெர்பாவ் ஆகிய தொகுதிகளில் அம்னோ வெற்றி பெற்றதை எதிர்த்து பிகேஆரும் பிரிபூமி பெர்சத்து கட்சியும் செய்து கொண்ட தேர்தல் பெட்டிஷனை செவிமடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லோரன்ஸ் செக்கிரே, அந்தத் தேர்தல்களில் மோசடியும் முறைகேடும் நடந்ததாகத் துல்லிதமான விவரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் அந்த 3 தொகுதிகளில் அம்னோவின் வெற்றி உறுதி செய்யப்படுவதாகத் தீர்ப்பளித்தார்.

லுபோக் மெர்பாவ் வேட்பாளரான அம்னோவின் ஜுரிஜ் ஜலாலுடின் சமயப் பள்ளி ஆசிரியராகவும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளராகவும் பணம் சம்பாதிக்கும் தொழிலில் இருப்பதாக பிபிஎம்பியின் வேட்பாளர் சுல்காமி ஹஷிம் குறிப்பிட்டது ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி குறிப்பிட்டார். ஜுரிஜ், வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னரே தமது பொறுப்புகளிலிருந்து விலகி விட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கைருடின் தர்மிஸி, முகமட் அஷ்ஹார் ஜமாலுடின் மற்றும் ஜுர்ஜி ஆகியோர் ஹூத்தான் மெலிந்தாங், சங்காட் ஜோங் மற்றும் லுபோக் மெர்பாவ் தொகுதிகளில் பெற்ற வெற்றியானது செல்லும் என செக்குரே தீர்ப்பளித்தார்.

Exit mobile version