Site icon அநேகன்

பாலு நகரில் பூகம்பம் சுனாமி 50க்கும் அதிகமானோர் பலி

ஜாகர்த்தா, செப். 29-

சுலாவெசி தீவிலுள்ள பாலு நகரை புகம்பமும் சுனாமியும் தாக்கியதில் மரணமுற்றோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

இந்த பேரிடரில் 356 பேர் காயமடைந்திருப்பதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாகத் துறை கூறியது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கும் பாலு நகரை சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள் தாக்கியதாக அத்துறை கூறியது.

ஏற்கெனவே சுலாவெசியில் 7.4 ரிக்டர் அளவில் நில நடுக்கமும் தாக்கியிருந்தது. சுனாமியால் இழுத்துச் செல்லப்பட்ட பலர் கடலோரத்தில் கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வீடுகள், மருத்துவமனைகள், பேரங்காடிகள், தங்கும் விடுதிகள் இடிந்து விழுந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு, பாலங்களை ராட்சத அலைகள் இழுத்துச் சென்று விட்டன. சிலர் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பிணமாகக் கிடந்தனர்.

காயமுற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். பூகம்பம் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டொங்காலா எனும் பகுதியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version