Site icon அநேகன்

மளிகைக் கடையில் தீ: உரிமையாளருக்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு

கூலிம், செப் 30
பாயா பெசார், தாமான் கங்கோங்கிலுள்ள மளிகைக் கடை ஒன்று அதிகாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.

இச்சம்பவத்தில் கடை 80 விழுக்காடு சேதமுற்றதில் அதன் உரிமையாளர் ஆர்.சுப்ரமணியத்திற்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு 9.00 மணிக்கு கடையை மூடும் போது நல்ல நிலையில்தான் இருந்தது என்றும் இச்சம்பவம் குறித்து தனது நண்பர் தொலைபேசி மூலம் அழைத்து தகவலைக் கூறியதாகவும் சுப்ரமணியம் தெரிவித்தார்.

கடைக்குச் சென்று பார்த்ததில் தீ பரவிக் கொண்டிருந்ததால் அனைத்துப் பொருள்களையும் மீட்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.

கடந்த 7 ஆண்டுகளாகக் இந்த கடையை தாம் நிர்வகித்து வருவதாகவும் கடையை மேலும் விரிவுப்படுத்த இரு கடை வீடுகளை ஒன்றாக்கியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து அதிகாலை 5.37 மணிக்குத் தகவல் கிடைத்ததாக கூலிம் தீயணைப்பு மீட்பு நிலையத் தலைவரும் தீயணைப்புத் துணை ஆணையருமான ஹமிஸுல் அஸுவான் ஹம்டான் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் வீட்டின் 80 விழுக்காடு பகுதி சேதமுற்றது. இதற்கான காரணம் மற்றும் இழப்பீடு குறித்து விசாரணை செய்யப்படுவதாக ஹமிஸுல் குறிப்பிட்டார்.

Exit mobile version