கோலாலம்பூர், செப் 30
ஜாலான் ராஜா லாவுட், டூக் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் சம்செங் எனும் சோதனை நடவடிக்கையில் சூப்பர்மேனைப் போல் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறைத் தலைவர், துணை கமிஷனர் ஸுல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.
நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 5.00 மணி வரை இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த 5 நபர்களும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42இன் கீழ் கைது செய்யப்பட்டு கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் போலி எண் பட்டையைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 108ஆவது பிரிவின் கீழ் 20 வயது மதிக்கத்தக்க மற்றுமோர் ஆடவன் கைது செய்யப்பட்டான்.
இச்சோதனை நடவடிக்கையின் போது 230 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 35 கார்கள் சோதனையிடப்பட்டன. அவற்றில் புகைக் குழாய் மாற்றி இருத்தல், கருப்பு கண்ணாடியைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 11 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று ஸுல்கிப்ளி சொன்னார்.
அதோடு மட்டுமின்றி ஓட்டுநர் உரிமமின்மை, சாலை வரி காலாவதி, பக்கக் கண்ணாடிகளின்மை, குறிப்புகள்படி பதிவெண்கள் இல்லாமை, பதிவெண்கள் இல்லை ஆகிய பல்வேறு குற்றங்களுக்காக 191 சம்மன்களும் வெளியிடப்பட்டது அவர் தெரிவித்தார்.

