போர்ட்டிக்சன், அக்.1-
நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பி.கே.ஆர். கட்சியின் பொதுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்முக்கு வாக்கு வேட்டையாட கிடைத்திருக்கும் புதிய அரசியல்வாதி ம.இ.கா-வின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ எஸ். சோதிநாதன்.
நாட்டின் 8 ஆவது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் என்ற முழக்கத்தோடு போர்ட்டிக்சன் மூலை நெடுக்குகளில் எல்லாம் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் , ஞாயிற்றுக்கிழமை அன்வாரின் பிரச்சாரத்தில் திடீர் பிரமுகராக தோன்றினார் சோதிநாதன்.
2000 ஆம் ஆண்டு தொடங்கி 2008 ஆம் ஆண்டு வரை தெலுக் கெமாங் ( தற்போது போர்ட்டிக்சன் ) நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த சோதிநாதன் கடந்த ஆகஸ்ட் மாதம் ம.இ.கா.-வில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடதக்கது. நாட்டில் பிரதமரை நாடாளுமன்ற உறுப்பினராகக் தொகுதிகள் அதிகம் இல்லை.அந்த வகையில் போர்ட்டிக்சன் கொடுத்து வைத்த ஒரு தொகுதி என சோதிநாதன் தமது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே ஒரு பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினராக கிடைத்துள்ளார் என்பதை சோதிநாதன் சுட்டி காட்டினார். வரும் அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அங்குள்ள வாக்காளர்கள், அன்வாருக்கு முழு ஆதரவைத் தந்து அவருக்கு மிகப் பெரிய வெற்றி மாலையை சூட வேண்டும் என சோதிநாதன் கேட்டு கொண்டார்.
இந்த இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வதால் தாம் தீவிர அரசியலுக்கு திரும்பி விட்டதாக அர்த்தம் இல்லை என சோதிநாதன் கூறினார். அரசியல் இருந்து தாம் ஓய்வுப் பெற்று விட்டதாக அவர் சொன்னார். போர்ட் டிக்சன் மக்களுக்காகவும் அன்வாருக்காக மட்டுமே தாம் பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

