Site icon அநேகன்

முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் ஏன் போட்டியிடவில்லை ? அன்வாருக்கு அப்துல் ஹடி அவாங் கேள்வி !

போர்ட்டிக்சன், அக்.1 –

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள பி.கே.ஆர். கட்சியின் பொதுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் முடிவை பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் கடுமையாக விமர்சித்துள்ளார். முஸ்லிம்கள் அதிகம் உள்ளத் தொகுதியில் போட்டியிட அன்வாருக்கு தைரியம் இல்லையா என அவர் கேல்வி எழுப்பியுள்ளார்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் 43 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்கள் ஆவர். அதேவேளையில் அந்தத் தொகுதியில் 33 விழுக்காடு சீன வாக்காளர்களும், 22 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் உள்ளனர். 55 விழுக்காடு முஸ்லிம் அல்லாத வாக்காளர்கள் உள்ள நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அன்வாரின் முடிவை அவர் கேள்வி எழுப்பினார்.

அதேவேளையில் அன்வார் இப்ராஹிம் ஒரே நிலைப்பாட்டைக் கொண்ட தலைவர் அல்ல என்றும் அப்துல் ஹடி அவாங் விமர்சித்துள்ளார். அன்வார் இப்ராஹிம்,  இடத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டு பேசும் ஓர் அரசியல் தலைவர் என்றும் ஹடி கூறுகிறார்.

மசூதியில் இருந்தால் தம்மை ஒரு மதவாதியாக காட்டிக் கொள்ளும் அன்வார், இந்தியர்கள் மத்தியில் தோன்றினால் நடனமாடுகிறார் என ஹடி தெரிவித்தார். நமக்கு என்று ஒரு கலாச்சாரம் உள்ளது. நாம் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் இந்தியர்கள் நம்மை மதிப்பார்கள் என்று ஹடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக வேண்டும் என்று பேராசைக் கொண்ட ஒரு தனிநபருக்காக போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அப்துல் ஹடி கூறினார். இது பண விரயத்தை ஏற்படுத்துவதுடன் தேவையற்ற ஓர் இடைத் தேர்தல் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version