கோலாலம்பூர், அக். 6
தேசிய முன்னணியில் நீடிக்க விரும்பமில்லை என்றால் மசீச கூட்டணி தாராளமாக விலகட்டும். அதற்கு தடையேதும் இல்லை என்று அம்னோவின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தனது ஆட்சியை இழந்தது. அந்தத் தோல்விக்கு அம்னோதான் காரணம் என மசீச தாக்கி பேசி வந்தது. தேசிய முன்னணியில் மசீச நீடிக்க வேண்டுமா என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அண்மையில் அதன் தலைவர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து கைரி ஜமாலுடின் கூறுகையில், பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் படுதோல்விக்கு தோல்விக்கு அம்னோவை மட்டுமே காரணம் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதில் மசீசாவின் பங்கும் உள்ளது. அதனை மசீச மறைக்க விரும்பினாலோ அல்லது தேசிய முன்னணியின் மீது மசீசவுக்கு நம்பிக்கை இல்லையென்றாலோ தாராளமாக மசீச தேசிய முன்னணியிலிருந்து விலகலாம் என்று அவர் தெரிவித்தார்.
13 உறுப்புக் கட்சிகளோடு செயல்பட்டு வந்த தேசிய முன்னணியில் தற்போது அதன் தொடக்ககால உறுப்புக் கட்சிகளான அம்னோ, மசீச மற்றும் மஇகா மட்டுமே உள்ளன.
மசீச தேசிய முன்னணியிலிருந்து விலகும் பட்சத்தில் சீன சமுதாய ஆதரவைப் பெற வேறு சீன சமுதாயக் கட்சியைச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மே 9 தேர்தலுக்குப் பின்னர், மசீச தலைவர்கள் அம்னோவைத் தாக்கிப் பேசி வருகின்றனர். அதன் தலைவர்கள் தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை எடுக்கத் தயங்குகின்றனர். கெராக்கான் கட்சி ஏற்கனவே அதிலிருந்து விலகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

