Site icon அநேகன்

நெடுஞ்சாலையில் எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட லோரி

உலு சிலாங்கூர், அக். 7
சுங்கை புவாயா டோல் சாவடி அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு நெடுஞ்சாலையின் 432ஆவது கிலோ மீட்டரில் எதிர்த் திசையில் லோரியை செலுத்திய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 9.15 மணியளவில் எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட இந்த லோரியுடன் எதிரே வந்த லோரி விபத்தில் சிக்கியது. 37 வயதான நபர் நெடுஞ்சாலையின் நடுப் பாதையில் எதிர்த் திசையில் லோரியை செலுத்தியதாக சிலாங்கூர் போக்குவரத்து போலீஸ் புலன் விசாரணை அமலாக்கப் பிரிவுத் தலைவர் சூப்ரிண்டென்டன்ட் அஸ்மான் ஷரியான் தெரிவித்தார்.

48 வயது நபர் செலுத்திய லோரி நெடுஞ்சாலையின் நடுப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்த் திசையில் வேகமாக வந்த லோரியுடன் விபத்துக்குள்ளானது என்று அவர் கூறினார்.

எனினும் லோரி ஓட்டுநர்கள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் மதுபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய பரிசோதனைக்காக கோல குபுபாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் 2 லோரிகளின் முன் பகுதியும் சேதமடைந்தன. எதிர்த் திசையில் லோரி வேகமாகச் செலுத்தப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Exit mobile version