Site icon அநேகன்

அன்வார் இப்ராகிமிற்கு எதிராக போலீசில் புகார்

போர்ட்டிக்சன், அக். 8-

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது கையூட்டு அடிப்படையில் வாக்காளர்களிடம் வாக்குறுதி அளித்ததாக பிகேஆர் பொதுத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு எதிராக சுயேச்சை வேட்பாளர் ஸ்டீவி சான் கெங் லியோங் நேற்று போலீசில் புகார் செய்தார்.

ஸ்டீவி நண்பகல் மணி 12.00க்கு போர்டிக்சன் மாவட்ட தலைமையகத்தில் இந்த புகாரைச் செய்ததாகக் கூறப்பட்டது.

போர்ட்டிக்சன் மக்களுக்காக அன்வார் மேற்கொள்ளவிருக்கும் மூன்று நடவடிக்கைகள் மற்றும் இணையத்தில் இலவச டியூஷன் திட்டம் போன்றவை குறித்து அப்புகாரில் ஸ்டீவி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஸ்ரீ தஞ்சோங்கில் மேற்கொண்ட பிரசார நடவடிக்கையில் ஐந்து நட்சத்திர சுற்றுலா திட்டம், விமான பயண திட்டம் மற்றும் கல்வி திட்டம் ஆகியவற்றைத் தாம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார்.

அதோடு, கடந்த 4ஆம் தேதி போர்ட்டிக்சனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1ஆம் படிவம் தொடங்கி 5ஆம் படிவம் வரையிலான மாணவர்களுக்கு இணையத்தில் இலவச டியூஷன் திட்டத்தைத் தான் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்” என்றார் ஸ்டீவி.

இந்தத் திட்டங்கள் மற்றும் போர்ட்டிக்சனில் இணையத்தில் இலவச டியூஷன் திட்டத்தை அறிவித்ததன் வாயிலாக அன்வார் கையூட்டு தொடர்பான 1954 ஆம் ஆண்டு தேர்தல் குற்றவியல் சட்டம் பிரிவு 10 (ஏ) மற்றும் (பி)யை மீறியுள்ளார்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Exit mobile version