Site icon அநேகன்

ஆதார் அட்டையை மலேசியாவில் நடைமுறைப்படுத்தும் சாத்தியங்கள் ஆராயப்படுகின்றன !

கோலாலம்பூர், அக்.16 –

மலேசியாவில் பயன்படுத்தப்படும் மை கார்ட்டுகளுக்கு பதிலாக, இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை முறையை நாட்டில் நடைமுறைப்படுத்தும் சாத்தியங்கள் ஆராயப்பட்டு வருவதாக  மனிதவள அமைச்சர் எம். குலசேகரன்  தெரிவித்திருக்கின்றார்.

ஆதார் அட்டை முறை மூலம், அரசாங்க சமூக நலத் திட்டங்கள், உதவித் தொகைகள் மற்றும் மானியங்கள் வழங்குவதில் நிலவும் உழல்களையும் மோசடிகளையும் களைய முடியும் என்று, எம். குலசேகரன் தெரிவித்தார். பொதுச் சேவையை மக்களிடம் புத்தாக்க முறையில் கொண்டுச் சேர்ப்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகிறது. ஆகவே, மை கார்ட்டுகளில் உள்ள அம்சங்களை மேம்படுத்துவதில் ஆதார் அட்டை முறையை பின்பற்ற முடியும் என்று தமது தரப்பு நம்புவதாக குலா தெரிவித்தார்.

ஆதார் அட்டை முறை மூலம், பண மோசடிகளையும் சூழ்ச்சி நடவடிக்கைகளையும் தடுக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இருப்பினும், முழுமையான ஆய்வுக்குப் பின்னரே, அது தொடர்பில் ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்று அறிக்கை ஒன்றின் வழி குலசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கடந்த மே மாதம், மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதம் நரேந்திர மோடி, மலேசியாவில் ஆதார் அட்டை முறையை அமல்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆதார் அட்டை முறையின் விவரங்களை தெரிந்துக் கொள்வதற்காக, குலசேகரன் தலைமையில், நிதியமைச்சு, பொருளாதார விவகார அமைச்சு, தேசிய வங்கி, மற்றும் மனிதவள அமைச்சின் பிரதிநிதிகள் அண்மையில் இந்தியாவுக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

Exit mobile version