Site icon அநேகன்

ஒரு தலைப்பட்சமாகப் பிள்ளைகளை மதம் மாற்றக் கூடாது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், அக். 16
தம்முடைய சம்மதமின்றி தமது முன்னாள் மனைவி மற்றும் பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், புத்த மதத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் வெற்றிபெற்று பிள்ளைகளைத் தனது பராமரிப்புக்குக் கொண்டு வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அஸிஸா நவாவி, மழலையர் பள்ளி ஆசிரியையான எம்.இந்திரா காந்தி வழக்கின் தீர்ப்பைப் பின்பற்றி, பிள்ளைகளின் மத மாற்றத்தை ரத்து செய்வதாகக் குறிப்பிட்டார்.

இந்திராகாந்தி மதம் மாறிய தமது முன்னாள் கணவர், தமது சம்மதமின்றி 3 பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றிய வழக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகார இலாகாவின் வழக்கறிஞர் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்ற மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சம்பந்தப்பட்ட தந்தை 2016ஆம் ஆண்டு மதம் மாறிய தனது முன்னாள் மனைவி ஒருதலைப்பட்சமாகத் தனது பிள்ளைகளை மதம் மாற்றியதை ரத்து செய்ய வேண்டுமென வழக்குத் தொடுத்தார். மேலும், பிள்ளைகளுக்கு வழங்கபப்ட்ட மதம் மாற்றப்பட்டதற்கான சான்றிதழ்களைச் செல்லுபடியாகாது என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.

அவரின் முன்னாள் மனைவி பிள்ளைகளைத் தம்முடைய பராமரிப்பில் வைத்துக் கொள்ளவே அவர்களை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் 2015ஆம் ஆண்டு இஸ்லாமிற்கு மாறியதாகவும் அது இருவரின் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தபோது நடந்துள்ளது. பிள்ளைகள் 2016ஆம் ஆண்டு மே மாதம் கூட்டரசுப் பிரதேச சமய இலாகாவில் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களிருவரின் விவாகரத்து இவ்வாண்டு ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. அந்தத் தாயார் பிள்ளைகளைப் பராமரிக்க அனுமதி பெற்ற பின்னர், அவர்களை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் சம்பந்தப்பட்ட தாயார் மற்றும் ஜாவியின் வழக்கறிஞரான சுல்கிப்லி சே யோங் தாம் இத்தீர்ப்பு பற்றிக் கூட்டாரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

Exit mobile version