கோலாலம்பூர், அக். 20-
மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடக்கின்றது. கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு நேரடிப் போட்டி நிலவும் வேளையில் 3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, 21 மத்திய செயலவை பதவிகளுக்கு 44 பேர் களம் இறங்கியுள்ள வேளையில் முக்கியமாக 10 மாநிலங்களில் செயற்குழு பதவிக்கு போட்டி நிலவுகின்றது.
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. இதில் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து ஐ.ஆர்.டி.கே.எல்.குழுமத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ ராமசாமி போட்டியிடுகிறார். முன்னதாக 2015ஆம் ஆண்டு நடந்த மஇகாவின் மறுதேர்தலின் போது டத்தோஸ்ரீ சரவணன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
அப்போது 17 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போதும் நேரடி போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் எதிர்நோக்கியுள்ளார். கட்சியில் செல்வாக்கு கொண்ட 2 தலைவர்கள் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் கட்சியின் 3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றார்கள். 2015ஆம் ஆண்டு தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கட்சியின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் டத்தோ வீ.எஸ்.மோகன், முன்னாள் பொருளாளர் டத்தோ ஜஸ்பால் சிங், இம்முறை போட்டியிடவில்லை. மாறாக உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள டத்தோ டி.மோகன் இம்முறையும் போட்டியிடுகிறார். அவரோடு கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன், தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவின்குமார், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ மாணிக்கம், ஜோகூர் மாநில தொடர்பு குழு தலைவர் டத்தோ அசோஜன், உமா ராணி குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ராமலிங்கம், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா, கே.டி.பாலா, அன்பழகன் பொன்னுசாமி, ரமணி கிருஷ்ணன் என இப்பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.
கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் இப்பதவிக்கும் கடுமையான போட்டி நிலவுகின்றது. கட்சியின் 21 மத்திய செயலவை பதவிக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக மத்திய செயலவை பதவியை தற்காத்துக் கொள்ள முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ வி.கமலநாதன், கெலாங் பாத்தா கண்ணன், பேரா தியாகராஜன், ஈஜோக் பார்த்திபன், டி.எச்.சுப்ரா, மதுரை வீரன் மாரிமுத்து, சிப்பாங் குணாளன், டத்தோ ஆர்.எஸ்.மணியம், ஜெ. தினகரன், டத்தோ முனியாண்டி, குளுவாங் ராமன் போட்டியிடுகின்றார்கள்.
இவர்களுடன் தியாகராஜன், என்.ரஹிம், டத்தோ எம்.பி.நாதன், டத்தோ சுப்ரமணியம் கருப்பையா, சதாசிவம் காளிமுத்து, சி.எம்.ரமேஷ், ஆர்.ராஜேந்திரன், கே.ராஜன், வி.பி.சண்முகம், டாக்டர் பி.வேலாயுதம், குணசீலன் ராஜன், எம்.வெற்றிவேலன், ஆர்.நெடுஞ்செழியன், பி.பன்னீர்செல்வம், டத்தோ ஆர்.சுப்ரமணியம், ஆர்.டி.ராஜா, சரவணன், சுப்பையா, ராமச்சந்திரன், சௌதராஜன், பி.விஜயன், பேரா எம்.வீரன், கே.ரவி, டி.தர்மகுமாரன், எஸ்.கே.சுரேஷ், சேலை பாஸ்கரன், சிவலிங்கம் டத்தோ சின்னதம்பி, சிவகுமாரன், சுபாங் கிருஷ்ணன், ஜீவா, ஜீ.கே.தெப்பளா, கே.முரளிநாத், ஆர்.மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.
பெர்லிஸ் மாநிலத்தை தவிர்த்து சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் உட்பட 10 மாநிலங்களில் செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் 10 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இப்போட்டி நடக்கின்றது. இப்பதவிக்கு கெடாவில் 25 பேரும், பினாங்கில் 23 பேரும், பேராக்கில், 29 பேரும், சிலாங்கூரில் 15 பேரும், கூட்டரசு பிரதேசத்தில் 20 பேரும், பகாங்கில் 14 பேரும், மலாக்காவில் 16 பேரும், ஜோகூரில் 15 பேரும், நெகிரி செம்பிலானில் 16 பேரும், கிளந்தானில் 15 பேரும் போட்டியிட தங்களின் வேட்புமனுகளை தாக்கல் செய்தனர்.
இதனிடையே, சிலர் தங்களின் வேட்புமனுகளை மீட்டுக்கொண்ட பிறகும் மாநிலங்களுக்கான தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாளை மாலை 4 மணி தொடங்கி 7 மணி வரை அந்தந்த மாநிலங்களில் உள்ள 147 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். பின்னர் இரவு 8 மணி தொடக்கம் தேர்தல் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளிவரத் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு மஇகா உயர்மட்ட தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் நடவடிக்கை குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

