கோலாலம்பூர், அக் 24
அண்மையில் நடந்து முடிந்த மஇகாவின் தேசிய, மாநில தேர்தலில் மோசடி மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக சில தரப்பினர் பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியிட்டதோடு சமூக வலைத்தளங்களிலும் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
அம்மாதிரியான அறிக்கைகள் வெளியிடுவதற்கு முன்னர் சந்தேகங்கள் ஏதும் இருந்தால் நேரடியாகக் கட்சியைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளுங்கள். முழு விவரம் தெரியாமல் விமர்சனம் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.
மஇகா தேர்தல் சுமுகமான முறையில் நடத்தப்பட்ட போதிலும் சில புகார்கள் வந்துள்ளதால் அதனை கவனிப்பதற்கு தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
மேலும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டான்ஸ்ரீ ராமசாமி மஇகா தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார்களையும் அக்குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
தேர்தலுக்குப் பின்னர் கட்சியை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றும் இந்திய சமுதாயத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றோம்.
இம்மாதிரி விமர்சனங்கள் வெளியாவது கட்சிக்கு சவாலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். அதில் தோல்வி கண்டவர்கள் கட்சியை விட்டு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சியை வலுப்படுத்த மற்றவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். இதில் பொது நலமாக இருக்க வேண்டுமே தவிர சுயநலமாக இருக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, எதிர்வரும் 27ஆம் தேதி மஇகாவின் தேசிய பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை தாம் தொடக்கி வைக்க போவதாகவும் தேசிய முன்னணியின் கட்சியின் தலைவர் ஸாஹிட் ஹமிடி கலந்து கொள்வார் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது ஒரு புதுமையான மாநாடாக இருக்கும் என்றும் இதில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படுவதோடு பல மாற்றங்கள் கொண்டு வரும் திட்டங்களை வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்த 5 ஆண்டுகளில் கட்சியை எவ்வாறு வழிநடத்தப் போகிறோம் என்றும் ஒவ்வோர் ஆண்டும் கட்சியில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறோம் என்றும் இந்த மாநாட்டில் பேசப்படும் என்றார் அவர்.

