கோலாலம்பூர், டிச.15-
நெருக்குதல்களுக்கு அடிப்பணிந்து, அம்னோ தலைவர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதில்லை என டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தீர்க்கமாக தெரிவித்துள்ளார். அம்னோ பொதுப் பேரவையின் மூலம் மட்டுமே, கட்சியின் உறுப்பினர்கள் தம்மை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியும் என அஹ்மாட் சாஹிட் தெரிவித்திருக்கிறார்.
. “முன்பு விடுமுறையில் செல்ல சொன்னார்கள். இப்போது பதவி விலகச் சொல்கிறார்கள். ஆனால் அம்னோ பொதுப் பேரவையின் மூலம் மட்டுமே என்னை நீக்க முடியும். அதேவேளையில், கடந்த பொதுப் பேரவையில் பங்கேற்ற பேராளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் , நிச்சயம் கலந்துக் கொள்ள வேண்டும் என அவர் சீனார் ஹரியானுக்கு வழங்கிய பேட்டியில் அறிவுறுத்தியுள்ளார்.
அஹ்மாட் சாஹிட் ஹமிடி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சபா அம்னோ இளைஞர் பிரிவும், அலோர் ஸ்டார் இளைஞர் பிரிவும் போர்க்கொடி தூக்கியுள்ளன. அம்னோவில் இருந்து அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொகுதித் தலைவர்களும் வெளியேறி வேளையில் சாஹிட் ஹமிடிக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
அம்னோவுக்கு புதியத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடினும் தெரிவித்துள்ளார். புதிய அம்னோ பொதுப் பேரவையை நடத்துவது குறித்து, கட்சியின் தலைமையகம் தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் கூறினார். கடந்த பொதுப் பேரவையில், அம்னோ பேராளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர். இதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பேராளர்களின் முடிவே ஏற்றுக் கொள்ளப்படும் என அஹ்மாட் சாஹிட் கூறினார்.
அம்னோ தலைவர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை என மேலும் பலர் கட்சியில் இருந்து விலகுவார்கள் என லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்திருப்பது குறித்து கருத்துரைக்கையில் அம்னோவில் இருந்து வெளியேறியப் பின்னர் அதனைப் பற்றி பேசுவதற்கு ஹம்சாவுக்கு உரிமையில்லை என கூறினார்.

