Site icon அநேகன்

மலேசியாவின் கனவு ஹனோய்யில் கலைந்தது !

கோலாலம்பூர், டிச.16 –

இரண்டாவது முறையாக தென்கிழக்காசிய கால்பந்து சம்மேளனக் கிண்ணத்தை ( ஏ.எப்.எப்) வெல்லும் மலேசிய கால்பந்து அணியின் கனவு ஈடேறவில்லை. சனிக்கிழமை வியட்நாமின் ஹனோய்யில் நடைபெற்ற இரண்டாவது இறுதி ஆட்டத்தில் மலேசியா 0 – 1 என்ற கோலில் உபசரணை அணியான வியட்நாமிடம் தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம், 10 ஆண்டுகளுக்குப் பின்னர், வியட்நாம் ஏ.எப்.எப் கிண்ணத்தை இரண்டாவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் மலேசியாவும் , வியட்நாமும் 2 – 2 என்ற கோல்களில் சமநிலைக் கண்டிருந்தன.

இந்நிலையில், இரண்டாவது இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவது அல்லது 3 கோல்களில் சமநிலைக் காணுவது எனும் மிகப் பெரிய சவாலுடன் மலேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா களமிறங்கியது. எனினும் ஆட்டம் தொடங்கிய  6 நிமிடங்களில் , ஙேகுவன் ஆன் டுக் போட்ட ஒரே கோல் வியட்நாமின் வெற்றியை உறுதிச் செய்தது.

அந்த கோலைப் போடும்போது ஙேகுவன் ஒப்சைட் நிலையில் இருந்ததாக ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்கள், நடுவரிடம் வாதிட்டாலும், ஈரானைச் சேர்ந்த நடுவர் அந்த கோலை அங்கீகரித்தார். ஒரு கோலில் பின் தங்கியிருந்தாலும் வெற்றி பெறுவதற்காக ஹரிமாவ் மலாயா கடும் போராட்டத்தை நடத்தியது.

எனினும் மத்திய திடல் பகுதியில் இருந்து தாக்குதல் ஆட்டக்காரர்களுக்கு முறையான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாததால் ஹரிமாவ் மலாயா ஒரு கோலில் தோல்வி அடைந்தது. 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மலேசியா ஏ.எப்.எப் கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளது.

Exit mobile version