Site icon அநேகன்

மலேசிய இந்து சங்கத்தின் தலைவாராக மீண்டும் டத்தோ மோகன் ஷாண்

கோலாலம்பூர், டிச 16
மலேசிய இந்து சங்கத்தின் 41ஆவது ஆண்டு கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் டத்தோ மோகன் ஷாண் தலைமையில் போட்டியிட்ட அன்பே சிவம் அணியில் உள்ள 10 பேர் வெற்றி பெற்று மத்திய செயலவைக்கு தேர்வு பெற்றனர். இந்நிலையில், டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷாண் மீண்டும் இந்து சங்கத்தின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து டத்தோ மோகன் ஷாண் கூறுகையில், 12 ஆண்டுகள் மலேசிய இந்து சங்கத்திலிருந்து பல திட்டங்களை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டுவிட்டதாகவும் இனி பதவியில் இருக்கும் வரை தொடர்ந்து தனது சேவையை குறிப்பாக சமயத்திற்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 41ஆவது ஆண்டு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய ரீதியில் திருமுறை விழா நடத்துவதற்கு வெ.625,000 வழங்கப்பட்டது. அந்தப் பணம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வழங்கப்பட்டது. ஆனால். அந்தப் பணம் இவ்வாண்டுதான் செலவு செய்யப்பட்டது. அந்த வகையில், 15,000 மாணவர்களுக்கு தேசிய அளவில் திருமுறை போட்டியும் நடத்தப்பட்டது. செடிக்கை பொறுத்தவரையில் அந்த பணத்திற்கான கணக்கையும் நாங்கள் ஒப்படைத்துவிட்டோம் என்று டத்தோ மோகன் ஷாண் கூறினார்.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் அரசாங்கம் வழங்கிய மாணியம் எவ்வாறு செலவிடப்பட்டது என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியது குறித்து வினவப்பட்ட போது அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

மேலும், மலேசிய இந்து சங்கத்திலும் அதன் கணக்கறிக்கையிலும் எந்தவொரு தில்லு முல்லு விஷயங்களும் நடந்ததில்லை. அனைத்தும் முறைப்படி நடந்தது. கணக்காய்வாளர்கள் அதனை முறையாக கண்காணித்து வருகின்றனர். அதோடு, அடுத்தாண்டு முதல் செலவுகள் குறித்த விவரங்களையும் உறுப்பினர்களுக்கு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, வேட்புமனு விண்ணப்பங்களைப் பெறுவதற்கு வேட்பாளர்கள் கட்டணமாக வெ.250 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சங்கத் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இது ஆர்ஓஎஸ் எனப்படும் தேசிய பதிவிலாகாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆர்ஓஎஸ்சின் அனுமதி கிடைத்தப் பின்னரே இது அமல்படுத்தப்படும் என்று டத்தோ மோகன் ஷாண் தெரிவித்தார்.

அதே வேளையில், ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளிலுள்ள அனைத்து இந்து மாணவர்களுக்கும் இந்து சமயப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கான ஒரு தலைப்பட்சமான சட்ட சீர்த்திருத்ததை விரைந்து திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் சார்ந்த தீர்மானங்கள் இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

Exit mobile version