பெட்டாலிங் ஜெயா,டிச.17-
மூன்றாண்டுகளுக்கு முன் தனது இணையப் பதிவேட்டில் அரச மலேசிய போலீஸ் படையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவொன்றை பதிவேற்றம் செய்திருந்த குற்றத்திற்காக டத்தோ ஆர். ஸ்ரீசஞ்ஜீவன் கைது செய்யப்பட்டார்.
பதிவு நீக்கம் செய்யப்பட்ட மலேசிய குற்றச்செயல் கண்காணிப்பு நடவடிக்கைக் குழு மை வாட்ச் தலைவரான 34 வயது ஸ்ரீசஞ்ஜீவன் திங்கட்கிழமை 12.25 மணிக்கு காஜாங், கண்ட்ரி ஹைட்ஸில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அரச மலேசிய போலீஸ் படையில் அரசு நிதி முறைகேடு என்ற தலைப்பிலான ஒரு போலீஸ் புகாரின் நகலை, ஸ்ரீசஞ்ஜீவன் தனது இணையப் பதிவேட்டில் பதிவேற்றம் செய்திருந்தது தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ சைபூல் அஸ்லி கமாரூடின் தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டு நவம்பரில், (https://srisanjeevanr.blogspot.my/) என்ற தனது இணையப் பதிவேட்டில் ஸ்ரீசஞ்ஜீவன் அந்தப் போலீஸ் புகார் நகலை பதிவேற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 1 மில்லியன் வெள்ளிக்கு மேற்போகாத அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஸ்ரீசஞ்ஜீவன் கைது செய்யப்பட்டதும் உடனடியாக பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட வேளையில், 5,000 வெள்ளி பிணைத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அவரை விடுவிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 8-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.

