புத்ராஜெயா, டிச.19
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளையில் இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசஹார் அசிசான் ஹரூன் அறிவித்துள்ளார்.
அதேவேளையில் ஜனவரி 22 ஆம் தேதி, முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அசாஹார் அசிசான் ஹரூன் கூறினார். இத்தேர்தலில் 2018 மூன்றாம் காலாண்டின் வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இதன் வழி 32 ஆயிரத்து 9 பேர் இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
இம்முறை இடைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடங்களில் நேரடியாக ஒளிபரப்ப தமது தரப்பு திட்டமிட்டுள்ளதாக அசாஹார் கூறினார். எனினும், வாக்குகளை எண்ணும் மையங்களில் இருந்து ஏதாவது ஒரு இடத்தில் இருந்து மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அவர் சொன்னார்.
அதேவேளையில், இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், முன் கூட்டியே வேட்புமனுக்களைப் பெற்று தங்களின் விவரங்களைத் தேர்தல் அதிகாரியிடம் சரி பார்த்துக் கொள்ளலாம் என அசாஹார் கூறினார்.

