கோலாலம்பூர், பிப். 15-
மலேசிய ஃபிரிபூமி பெர்சத்து கட்சி சபாவில் தமது கிளையை அமைக்கும் என அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் திட்டவட்டமாகக் கூறினார்.
சபா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஷாபி அப்டால் அவர்களின் வாரிசான் கட்சியை எதிர்த்து இக்கட்சி உருவாக்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். மாறாக தமது கட்சி மாநில மந்திரி பெசாருக்கு மேலும் வலு சேர்க்கும் என கூறியுள்ளார்.
மாநில மந்திரி பெசாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் அங்கு (சபா) கால் பதிக்கிறோம். நாங்கள் மாநில மந்திரி பெசாரை எதிர்க்கவில்லை. அவரது கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்றார் அவர்.
சபாவில் ஆட்சி அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் ஃபிரிபூமி கட்சியை தொடங்கவில்லை என கோலாலும்பூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.
சபாவில் நம்பிக்கை கூட்டணிக்கு எவ்வளவு ஆதரவு இருக்கின்றது என்பதை ஆராய்ந்த பின்னர் அங்கு கிளைகளை அமைக்கும் நடவடிக்கை தொடங்கும். சபாவில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வாரிசான் கட்சியில் சேர விரும்பவில்லை. அதன் அடிப்படையில் சபாவில் கட்சி தொடங்குவது தான் சிறப்பாக இருக்கும் என்று முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறினார்.

