கோலாலம்பூர், பிப் 16-
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் செயல்படும் பெர்சத்து கட்சியில் தாம் இணையப் போவதில்லை என பிகேஆர். கட்சியின் உதவித் தலைவரான சுரைடா கமருடின் அறிவித்திருக்கிறார்.
நம்பிக்கை கூட்டணியின் ஒரு உறுப்பு கட்சியாக பிகேஆர் இருந்து வருவதால் தாம் பெர்சத்து கட்சியில் இணைய வேண்டிய அவசியமில்லை என வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
ஜோகூர் பாருவில் குடும்ப ஆரோக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சருமான அஸ்மின் அலியுடன் தாமும் பெர்சத்து கட்சிக்கு தாவக்கூடும் என்று வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
பலர் பெர்சத்து கட்சியில் இணைந்து வருகின்றனர். தாம் கூட அக்கட்சியில் இணையக் கூடும் என பலர் பலவிதமான ஊகங்களை கூறிவருகின்றனர். தாம் தொடர்ந்து பிகேஆர் கட்சியில் இருந்து வரப் போவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே விரைவில் நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவினாலும் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார் .

