Site icon அநேகன்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர்!  -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்

பெட்டாலிங் ஜெயா, பிப். 16-

மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிலையை அடைந்திருக்கும் பட்சத்தில் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் அரசாங்கம் இனியும் காரணம் கூறக்கூடாது என்று மசீச தலைமைச் செயலாளர் டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான் தெரிவித்தார்.

இந்த வாக்குறுதிகளைத் தாங்கள் எப்போது நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்த தெளிவான கால அட்டவணையை வழங்கும்படியும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி பக்காத்தானை அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டு அம்னோவில் இருந்து விலகிய 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிப்ரவரி 12 ஆம் தேதி பிரிபூமி கட்சியில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வழி மக்களவையில் பக்காத்தான் உறுப்பினர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இக்கூட்டணி எட்டவும் வகை செய்துள்ளது.

பெர்சத்து கட்சிக்குத் தாவிய அம்னோ உறுப்பினர்களின் செயல் பொருத்தமற்றது மற்றும் ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்று வர்ணித்த சியூ தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது பக்காத்தானின் கடப்பாடாகும் என்று வலியுறுத்தினார்.

“நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கும் இந்தப் புது உத்வேகத்தின் வழி தேர்தல் கொள்கை அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் இனியும் சாக்கு போக்கு கூறக் கூடாது” என்றார் சியூ.

வாக்குகளை அள்ளி வீசும் பக்காத்தானின் செயலை மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்கும் முன்னதாகச் சாடினார்.

மக்களுக்கு வெறும் நம்பிக்கையை மட்டுமே ஏற்படுத்தும் அரசாங்கத்தால் நாடு நிச்சயம் முன்னேற்றம் அடையாது என்றார் அவர்.

Exit mobile version