கோத்தா கினாபாலு, பிப் 20-
கிமானிஸ் மற்றும் சிபிதாங் ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவை எதிர்த்து செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என்று இங்குள்ள கோத்தா கினாபாலு நீதிமன்றம் தேதி நிர்ணயித்தது.
கிமானிஸ் தொகுதிக்கான தேர்தல் மனுவை சிபுவிற்கான உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டத்தோ லீ ஹெங் கியோங் செவிமடுப்பார் என்று 14ஆவது பொது தேர்தலில் கிமானிஸ் தொகுதிக்கான வரிசான் சபா வேட்பாளர் கரிம் புஜாஙின் வழக்கறிஞர் சைபூல் சிபியான் சிடின் கூறினார்.
அத்தேர்தலில் கிமானிஸ் தொகுதியில் அம்னோவிலிருந்து விலகி சுயேட்சே நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹனிபா அமானை எதிர்த்து கரிம் போட்டியிட்டார்.
விசாரணை தேதியை கோத்தா கினாபாலு உயர்நீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் சின்டி எம்சி ஜூஸ் பலிதூஸ் நீதிமன்ற அறையில் நிர்ணயித்தார்.
கடந்த ஆண்டு மே 9ஆம் தேதி நடைபெற்ற பொது தேர்தலில் கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் கரிம் மற்றும் பார்ட்டி ஹராப்பான் ரக்யாட் சபாவைச் சேர்ந்த ஜபார் இஸ்மையில் ஆகியோர் இடையிலான மும்முனை போட்டியில் ஹனிபா 156 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றார்.
அதே வேளையில் சிபிதாங் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிட்ட யமானி 852 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றார்.
அவரை எதிர்த்து பார்ட்டி வாரிசான் சபா, பார்ட்டி ஹராப்பான் ரக்யாட் சபா வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

