கோலாலம்பூர், பிப் 22-
நாடறிந்த நகைச்சுவைக் கலைஞர் ஏஎம்ஆர் பெருமாள் அவர்களின் நல்லுடல் இன்று பூச்சொங் 14வது மைலில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கில் மஇகாவின் தேசிய துணை தலைவர் டத்தோ சரவணன், தேசிய உதவித் தலைவர் மேலவை உறுப்பினர் டத்தோ டி. மோகன், சந்திரகுமணன் உட்பட ஏராளமான கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
65 வயதுடைய பெருமாள் கடந்த சில நாட்களாக பெட்டாலிங் ஜெயா அசுந்தா மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
அவர் காலமான செய்தி அறிந்து நேற்று கம்போங் லிண்டங்கனில் உள்ள அவரது இல்லத்திற்கு கலைஞர்களும் அறிமுகமான நண்பர்கள் மற்றும் பொதுமக்களில் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று இறுதிச்சடங்கிற்கு பின்னர் அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
காலஞ்சென்ற பெருமாளுக்கு மனைவியும் ஐந்து பிள்ளைகளும் உள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலி தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் பெருமாள் நகைச்சுவை நிகழ்ச்சிகளை படைத்து வந்துள்ளார்.
அனைவருடனும் நட்பு பாராட்டி வந்துள்ள பெருமாள் தனக்கே உரிய பாணியில் தனித்தன்மையோடு மற்றவர்களை புண்படுத்தாமல் நகைச்சுவை செய்து வந்தார் என அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பல கலைஞர்கள் புகழாரம் சூட்டினர்.
மேடை நிகழ்ச்சிகளில் தனது அற்புதமான நகைச்சுவை மூலம் மக்களுக்கு சிந்தனையையும் சிரிப்பையும் வழங்கிய கலைஞர் ஏ எம் ஆர் பெருமாள் மீளாத் துயில் கொண்டது மலேசியக் கலை உலகிற்கு பெரிய இழப்பாகும்.

