லெங்கோங், ஆக.24-
தேசிய உயர்கல்வி நிதி அமைப்பு (பிடிபிடிஎன்) இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் வெ.243 கோடி (60%) கடனை வசூலித்து விட்டதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரி தெரிவித்தார். கல்வி கடனுதவியை பெற்றவர்களிடமிருந்து கடன் தொகையைத் திரும்ப வசூலிக்க விழிப்புணர்வு முகாம், ஆன்லைன் கட்டண சேவை முறை உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகளின் வாயிலாக இந்த ஆண்டில் வெ.400 கோடியை வசூலிக்க பிடிபிடிஎன் இலக்குக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்தாண்டில் 200 கோடி வசூலிக்க இலக்கு கொள்ளப்பட்டு இறுதியில் 340 கோடி வசூலிக்கப்பட்டது. அதேப்போல், இந்த ஆண்டு 243 கோடி வெள்ளி இதுவரையில் வசூலிக்கப்பட்டு விட்டதால் 400 கோடி வெள்ளி வரையில் கல்வி கடனுதவியை வசூலிக்க முடியும் என பிடிபிடிஎன் நம்புகின்றது.
அப்படிக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதில் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தும் முறை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த நேரடியாக பிடிபிடிஎன் அலுவலகத்திற்கு வரலாம். கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தைக் கடன் பெற்றவர்களுக்கு பிடிபிடிஎன் அளித்துள்ளது என்பதால் இதில் முழுமையாகச் செலுத்துபவர்களுக்கு 15 விழுக்காடு கழிவு மற்றும் மாதச் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துக் கொள்வதற்கு 10 விழுக்காடு கழிவும் வழங்கப்படும் என்று பத்திரிகையாளர்களிடம் ஷம்சுல் அனுவார் நசாரி குறிப்பிட்டார்.
