(தயாளன் சண்முகம்)
மலேசிய இந்தியர்கள் குறிப்பாக தமிழ் உணர்வுமிக்கவர்களை கவலையில் ஆழ்த்திவிட்டு, சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லீம் இயற்கை எய்திவிட்டார். நேற்று முன்தினம் காலை அவர் உயிர் பிரிந்ததாக, தவறான செய்தி வெளியானபோது, சமூகத் வலைத் தளங்கள் ஸதம்பித்துப் போயின.
அவர் நலமுடன் மீண்டும் சமுதாயப் பணிக்குத் திரும்ப வேண்டுமென ஆயிரக்கணக்கான மக்கள் இனம், மதம், சமயம் கடந்து தங்களின் பிரார்த்தனைகளை முன்வைத்தார்கள். அனைத்தையும் மீறி இறைவன் அவரை தம்மோடு அழைத்துக் கொண்டார். இந்திய முஸ்லிம் என்பதை விட, தமிழ் முஸ்லிம் என கூறுவதில் அவருக்கு எப்போதும் தனி மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி எனக் கூறுவதை விட பெருமை என்றால் மிகப் பொருந்தும். தாம் தோன்றும் மேடைகளில் மார்க்கத்தால் நான் ஓரு முஸ்லீம் இனத்தால் நான் ஒரு தமிழன் என்பதை எப்போதும் கூறுவார்.
டத்தோ ஹாஜி தஸ்லீம், இந்துகளின் சமய உணர்வுக்கு மாறான கருத்துகளை மையப்படுத்தி, இண்டலொக் நாவல் எழுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி காட்டுத் தீ போல பரவியபோது, முதலில் கொதித்து எழுந்தவர். நாடு முழுமையும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, அந்த நாவலின் உள்ளடக்கத்தை எடுத்துரைத்து, அந்த நூலை கல்வி அமைச்சு மீட்டுக் கொள்ள வேண்டுமென கடுமையாக எதிர்த்தவர்.
இந்தியர்களின் தயாரிப்பு பொருள்களை இஸ்லாமிய மக்கள் பயன்படுத்தக்கூடாது என இஸ்லாமிய போதகர் பேசிய போது, பிரிக்ஸ்பில்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியவர். அதோடு நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகாரையும் செய்ய வேண்டுமென பொங்கி எழுந்தார். அந்த அனைத்து காட்சிகளும் இன்றளவும் என் கண்களை விட்டு அகலவில்லை டத்தோ.
மகிழம்பு தமிழ்ப்பள்ளியை தத்தெடுத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தீர்கள். அந்த பள்ளியின் மேம்பாட்டுத் திட்டம் முழுமையடைவதற்குள் நீங்கள் எங்களை விட்டு சென்றுவீட்டீர்கள். ஆனால் அந்த பள்ளியின் மேம்பாட்டுத் திட்டத்தை எப்படி முன்னெடுக்க வேண்டுமென்பது குறித்து, நீங்கள் உங்கள் விசுவாசிகளிடம் கூறிச் சென்றதுதான், தமிழ், தமிழ்ப்பள்ளிகள் மீது நீங்கள் வைத்திருந்த அலாதியான காதலை வெளிக்காட்டுகின்றது. உங்களின் சேவை நிச்சயம் என்னால் பட்டியலிட முடியாது, அது எண்ணிக்கையில் அடக்காது.
உங்களின் வாழ்க்கையில் இறுதி நாட்கள் உங்களுக்குத் தெரிந்து விட்டதாலோ என்னவோ, உங்களின் பாசறையில் வளர்ந்த இளங்கோவன், அருண் துரைச்சாமி, அறிவானந்தம் ஆகியோருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வேலைகளை பிரித்துக் கொடுத்தீர்களா? உங்கள் வளர்ப்பு மகள்களுக்கு காணொளியையும் அனுப்பி, தைரியமாக இருக்கச் சொன்னீர்களா? நினைக்கும் போதெல்லாம் இதயம் கனக்கின்றது ஐயா. இதைச் சொல்லி அவர்கள் கலங்கிய போது, கண்ணீரைத் தவிர வேறு பதிலில்லை.
இந்திரா காந்தியின் மகள் மதமாற்று விவகாரத்தையும் நீங்கள்தான் கையில் எடுத்தீர்கள். இந்தியர்களின் குடும்பத்தில் ஓர் ஆளாக உருமாறி நின்ற உங்களின் இழப்பு அனைவரையும் கலங்கடித்து விட்டது. உங்களை அறியாதவர்கள் கூட உங்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உங்கள் தமிழ்சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்.
இந்த சமுதாயத்திற்காகவே போராடிப் போராடி உடல் நலத்தை கூட கவனிக்கத் தவறி விட்டீர்களே.. இனி இந்த சமுதாயத்திற்கு பிரச்னைகள் எழும் போது யார் வந்து முன்நிற்பார்? உங்கள் வழியைத் தொடரும் உங்கள் விசுவாசிகள் இருக்கும்வரை காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்திருப்பீர்கள். இனம், சமயம், மதம் கடந்து உங்களின் ஆத்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்!
