Site icon அநேகன்

சிலாங்கூரில் அஸ்மின் அலி, வான் அசிஸா தொகுதிகளுக்கு பாஸ் குறி!

ஷா ஆலம், ஆக. 24-
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பி.கே.ஆர். தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அசிஸா ஆகியோரின் தொகுதிகள் உள்பட சிலாங்கூர் மாநிலத்தில் 42 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஸ் குறி வைத்துள்ளதாக அக்கட்சியின் மாநில ஆணையர் சாலேஹான் முக்யி தெரிவித்தார்.

தற்போது வான் அசிஸா காஜாங் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகவும் அஸ்மின் அலி புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளனர். இந்நிலையில் அவர்களின் தொகுதிகள் உள்பட 42 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு பாஸ் தயாராக உள்ளது. வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் மும்முனை போட்டியை எதிர்கொள்ள சிலாங்கூர் பாஸ் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

வேறு எந்த நாடாளுமன்ற தொகுதிகளின் பெயரையும் குறிப்பிடாத அவர், அஸ்மின் அலியின் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் பாஸ் கட்சி கட்டாயம் போட்டியிடும் என சாலேஹான் முக்யி சொன்னார். பி.கே.ஆர். கட்சி தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னர் அந்த தொகுதி பாஸ் கட்சியின் தொகுதியாக இருந்தது. மேலும், பொதுத்தேர்தலில் ஜ.செ.கவையும் அமானா வையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் ஜ.செ.க. 8 தொகுதிகளிலும் அமானா பாஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருந்தன. பாஸ் கட்சி தனது பாரம்பரிய தொகுதிகளில்தான் போட்டியிடவுள்ளது. அதனால், ஜ.செ.க, அமானா ஆகிய கட்சிகள் எங்களுக்கு தொந்தரவு அளிக்க கூடாது. ஒருவேளை அவர்கள் போட்டியிட்டால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவை போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தயாராக இருக்கிறோம். பி.கே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால், அது தொகுதி பங்கீடுகளுக்காக அல்ல. மாறாக, மாநில நிர்வாகம் குறித்ததாகத்தான் இருக்கும். காரணம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் பாஸ் கட்சி இன்னமும் உள்ளதாக சாலேஹான் முக்யி கூறினார்.

Exit mobile version