நியோன், ஆக.25 –
2017/18 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான குலுக்கல் வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெற்றது.
இதில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் எச் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் நடப்பு வெற்றியாளரான ஸ்பெயினின் ரியல் மெட்ரிட், ஜெர்மனியின் பொருசியா டார்ட்மூண்ட் , சைப்ரசின் அப்போல் அணிகள் இடம்பெற்றுள்ளன.
2016.,2017 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் தற்போது ஹாட்ரீக் சாதனையைப் படைக்க காத்து கொண்டிருக்கிறது.
இதனிடையே ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு மீண்டும் திரும்பியுள்ள மென்செஸ்டர் யுனைடெட் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பிரிவில் போர்ச்சுகலின் பென்ஃபிகா, சுவிட்சர்லாந்தின் பேசல், ரஷ்யாவின் சி.எஸ்.கே மாஸ்கோ அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக், பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன், பெல்ஜியமின் அண்டர்லேக்., ஸ்காட்லாந்தின் செல்டிக் ஆகிய கிளப்புகள் இடம் பிடித்துள்ளன. இங்கிலீஷ் பிரீமியர் லீக் வெற்றியாளரான செல்சி, ஸ்பெயினின் அத்லேட்டிக்கோ மெட்ரிட், இத்தாலியின் ஏ.எஸ் ரோமா,. அசர்பைஜானின் காராபாக் சி பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன.
இத்தாலியின் யுவன்டஸ், ஸ்பெயினின் பார்சிலோனா டி பிரிவில் இடம்பெற்றுள்ள வேளையில் இங்கிலாந்தின் லிவர்புல் ஸ்பெயினின் செவியாவுடன் எப் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. இங்கிலாந்தின் மற்றொரு பிரதிநிதியான மென்செஸ்டர் சிட்டி உக்ரேனின் ஷக்தார் டோனேட்ஸ்க், இத்தாலியின் நப்போலியுடன் எப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
