கோலா நெருஸ், ஆக.25-
நடப்பு தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தம் பணியிலிருந்து அடுத்த மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். இந்நிலையில் புதிய போலீஸ் படைத் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி எனது தலைமையில் நடைபெறவிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
புதிய போலீஸ் படைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவரது பெயர் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்படும். காலிட்டுக்கு பதிலாக நியமிக்கப்பட இருக்கும் புதிய போலீஸ் படைத் தலைவர் தொடர்பில் எவ்வித ஊகங்களும் இருக்காது என கருதுகிறேன்.
போலீஸ் படை ஆணையத்துடனான இந்தக் கூட்டத்தில் தேசிய போலீஸ் படையின் சில இலாகாக்களுக்கான புதிய இயக்குநர்கள் நியமிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ ஸாஹிட் கூறினார்.
