கோலாலம்பூர், அக்.26-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள புவான் லத்தீஃபா கோயாவுடன் கோலாலம்பூர் மற்றும் இந்திய வர்த்தக சபை செயற்குழு மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
தலைவர் டத்தோ ஆர். ராமநாதன் தலைமையிலான இப்பேராளர் குழுவில் உதவித் தலைவர் டி.செல்வம், கௌரவ தலைமைச் செயலாளர் நிவாஸ் ராகவன், துணை தலைமைச் செயலாளர் டோனி கிளிஃபெர்ட் மற்றும் பொருளாளர் குமரகுரு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பு எம்ஏசிசி தலைமையகத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இந்த ஆணையத்தின் தலைமை ஆணையராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியான லத்தீஃபாவிற்கு தலைவர் ராமநாதன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இச்சங்கத்தின் கீழ் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள மலேசிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனம் குறித்த விவரங்களை லத்தீஃபாவிடம் அவர் விளக்கினார்.
அதே வேளையில், 20,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கோலாலம்பூர் மற்றும் இந்திய வர்த்தக சங்கம் முறைகேடுகளை எதிர்க்கும் கொள்கையில் மிகுந்த கடப்பாடு கொண்டுள்ளதையும் நேர்மையான சூழலில் மலேசிய வர்த்தகத் துறை அமைந்திருப்பதற்கு இச்சம்மேளனம் கொண்டுள்ள நன்னெறி கொள்கை குறித்தும் எம்ஏசிசி ஆணையரிடம் ராமநாதன் விவரித்தார்.
வரும் 2020 ஜூன் முதல் நடப்புக்கு வரும் ஊழல் தடுப்பு ஆணைய பிரிவு 17 ஏ விதிமுறையின் வழிகாட்டியை சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பின்பற்றும் வகையில் எம்ஏசிசி நாடு முழுமையும் பல திட்டங்களை சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளும் என்று லத்தீஃபா உறுதி அளித்தார்.
இச்சந்திப்பின் இறுதியில் இரு தரப்புகளும் நினைவுச் சின்னங்களைப் பகிர்ந்து கொண்டன.

