கோலாலம்பூர், அக்டோபர் 31-
மலேசியாவில் பார்க்க தவற விடக்கூடாத இடம் பத்துமலை என உக்ரேனின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா தெரிவித்திருக்கிறார்.
உக்ரேனிலிருந்து அதிகாரத்துவ தூதுக்குழு இன்று காலை அதன் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா, மலேசியாவிற்கான உக்ரேன் தூதர் அலெக்சாண்டர் நெச்சிடாயிலோ தூதர் ஆகியோர் தலைமையிலான குழு இந்நாட்டிற்கு வருகைப்புரிந்திருக்கின்றனர்.
மலேசியாவின் உக்ரைன் தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் விக்டர் கிபல்னிக் மற்றும் தூதரக பிரச்சினைகளுக்கான இரண்டாவது செயலாளரான கட்டெரினா ஷோர்னிகோவா, உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் இயக்குநர் ஜெனரல் மேடம் ஜன்னா லெஸ்கின்ஸ்காவும் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
பத்துமலை கோயிலில் உள்ள முக்கிய இடத்திற்கு வருகையாளர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்க வேண்டும். ஏனெனில் இந்த இடத்திற்கு வருபவர்கள் நிச்சயம் புத்துணர்ச்சியை பெறுவர். மேலும் மலேசிய இந்துகளிடையே பக்திக்கு ஓர் அடையாளமாக இந்த இடம் விளங்குகிறது என கிஸ்லிட்ஸ்யா தெரிவித்தார்.
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியார் கோயிலுக்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த வானளாவிய கட்டிடங்களை பார்வையிடுவதை விட இந்த இடம் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது மாதத்திற்கு 1000க்கும் மேற்பட்ட உக்ரேனிய சுற்றுலா பயணிகள் மலேசியாவிற்கு வருகின்றனர். சமீப காலமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு பத்துமலையும் பெருமளவில் பங்காற்றியிருக்கிறது.
ஸ்ரீ மகா மரியம்மன் கோயில் தேவஸ்தானம் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறுகையில், 1875ஆம் ஆண்டு முதன் முதலாக பத்துமலை திருத்தலத்தில் தைப்பூச திருவிழாவை கொண்டாட தொடங்கியதாகவும் தற்பொழுது 3 நாட்கள் தைப்பூச திருவிழாவில் 12 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர் என்றார்.
பத்துமலைக்கு வருகை தந்த பிரமுகர்களுக்கு டான்ஸ்ரீ நடராஜாவிற்கு மலர்மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
வருகையாளர்களுக்கு பத்துமலை அலுவலக மேலாளர் திரு பலகுருநாதன் மற்றும் தேவஸ்தானம் வியூக தகவல் தொடர்பு இயக்குனர் டத்தோ சிவகுமார் ஆகியோர் பத்துமலை குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினர்.

