கோலாலம்பூர், நவ. 4-
ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் இரண்டு முன்னாள் துணை அமைச்சர்கள் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நிதியை நேரடியாகப் பெற்றது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவில் (செடிக்) இருந்து நீதி கிடைக்கப் பட்டதாக விசாரிக்கப்படும் அந்த முன்னாள் அமைச்சர் இரண்டு முன்னாள் துறை அமைச்சர்களின் பெயரை வேதமூர்த்தி வெளியிடவில்லை.
தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் செயல்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிதி (செடிக்) இந்திய சமுதாயத்தை சென்றடையவில்லை என்பதை வேதமூர்த்தி தெரிவித்தார். அதற்கான புகார்களையும் தான் பெற்றதாக மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருப்பினும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்கு (மஇகா) செக்டிக்கிலிருந்து எந்த மானியமும் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
தேசிய கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக செடிக்கிலிருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. அவை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் தனி நபர்கள் பலன் அடைந்தார்கள் என வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
செடிக் என்பது இந்திய சமுதாயத்திற்காக இயங்கும் திட்டங்களை இயக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானியங்களையும் உதவிகளையும் வழங்க தேசிய முன்னணி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். ஆட்சி மாற்றம் நடந்து நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை கைப்பற்றிய பிறகு செடிக், மித்ரா என பெயர் மாற்றம் கண்டது.
இதனிடையே தாம் முன்பு கூறியதைப் போல இந்த நிதிகளை வழங்குவதில் ஒரு தவறான அணுகுமுறை இருந்தது என வேதமூர்த்தி குறிப்பிட்டார். அதோடு முன்னாள் அமைச்சர் இரண்டு முன்னாள் துணை அமைச்சர்களுக்கு நேரடியாக நிதி அனுப்பப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

