கோலாலம்பூர், நவ.6-
பி40 பிரிவைச் சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் டோல் கட்டணம் குறைப்பு அல்லது அகற்றம், எரிபொருள் கட்டணத்திற்கான உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் உதவாது.
எனவே, அரசாங்கம் மக்களின் பணத்தை அத்திட்டங்களுக்கு செலவிடக்கூடாது என பொருளாதார நிபுணரான முகமட் அப்துல் காலிட் வலியுறுத்தியுள்ளார்.
மாறாக, அந்நிதி புறநகர் பகுதிகளில் பொது போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கும் இருக்கின்றவற்றை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். அது வறுமையில் உள்ள பலருக்கும் உதவும் என தாம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உதாரணமாக, பி40 பிரிவில், மூன்றில் ஒரு பகுதியினர் கார், மோட்டார் சைக்கிள் முதலானவற்றைக் கொண்டிருக்கவில்லை. அதனால், எரிபொருளுக்கான உதவித்தொகையை வழங்கினால், அதன் பலன் அவர்களை சென்றடையாது. அதேப்போன்று, நகர்புறங்களில் டோல்களை கையகப்படுத்தும் முயற்சியையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதமரின் பொருளாதார ஆலோசகருமான காலிட் குறிப்பிட்டார்.

