குக்கூப், நவ.14-
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் விட்டு சென்ற பிரச்சனையைக் களைய பக்காத்தான் ஹராப்பானுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் தேவைப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது, எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனையைச் சரி செய்வது எளிதானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அப்பிரச்சனைகளை நோயுடன் உவமைப்படுத்திய அவர், அதன் வலியை (பிரச்சனையை) குணப்படுத்துவது எளிதானது அல்ல. முந்தைய அரசாங்கம் அதிகமான நோய்களை விட்டு சென்றிருப்பதால், தற்போதைய அரசாங்கம், அந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாகவும் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஜொகூர், குக்கூப் லாவோட்டில், நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பக்காத்தானுக்கு போதுமான கால அவகாசம் அதாவது ஐந்து ஆண்டுகள் வழங்கப்பட்டால், அதிகமான முந்தைய நோய்களை குறைக்க முடியும் அல்லது மீண்டும் சரி செய்ய முடியும் என்றாரவர்.
பக்காத்தான் அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதாகவும் அக்கூட்டணி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரியும் என சில தரப்பினர் முன்வைக்கும் கூற்றையும் அதன் பக்காத்தானின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் மறுத்துள்ளார்.

