Site icon அநேகன்

வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு அனுமதி கோருவது இறுதி நேர முடிவு கிடையாது -அமைச்சர் லியோவ் வூய் கியோங்

கோலாலம்பூர், நவ.14-

வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தஞ்சோங் பியாய் வேட்பாளர்கள் அனைவரும் போலீசாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற முடிவு இறுதி நேரத்திலும் தீய நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டது கிடையாது என்று பிரதமர் துறை அமைச்சர் லியோவ் வூய் கியோங் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தை போலீஸ், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையே வேட்பு மனு தாக்கல் தினத்தன்றே மேற்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் விவரித்தார்.

“முதல் நாளிலேயே இது குறித்து பேச்சு நடத்தப்பட்டது.42 பெர்மிட்டுகளை போலீஸ் அங்கீகரித்தது” என்றார் அவர்.

 “இது புதிதாகவோ அல்லது இறுதி நேரத்திலோ செய்யப்பட்ட முடிவு கிடையாது” என்று மக்களவையில் பெங்கெரான் தேசிய முன்னணி உறுப்பினர் அஸாலினா ஒத்மானின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் குறிப்பிட்டார்.

இம்முடிவு தேர்தல் பிரச்சார காலத்தின் இறுதியிலும்  தீய நோக்கத்திலும் செய்யப்பட்டது என்று அஸாலினா கூறினார்.

அதே வேளையில், இந்த முடிவுக்கு எதிராக தேர்தல் கண்காணிப்பு குழுவான பெர்சே 2.0 ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

“ஒரு நாடு கம்யூனிஸ்டு நாடாக உருவாகும் பட்சத்தில் மட்டுமே வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு அனுமதி தேவைப்படும். ஆகையால், இந்த உத்தரவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். தோல்வியைத் தழுவிவிடுவோம் என்ற அரசாங்கத்தின் அச்சத்தையே இது காட்டுகிறது” என்றார் அஸாலினா.

Exit mobile version