கோலாலம்பூர், நவ.14-
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், எதிர்கட்சியான தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென பிரபல இல்ஹாம் செண்டர் என்றழைக்கப்படும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய முன்னணிக்கு சீன சமூகத்தினரின் ஆதரவு திரும்பியிருப்பதால், அந்த வெற்றி சாத்தியமாகுமென அம்மையம் கூறியுள்ளது.
அந்த மையம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் தோல்வி (59.1 விழுக்காட்டினர்), நிறைவற்ற மத்திய அரசாங்கத்தின் அடைவுநிலை (59 விழுக்காடு), நிறைவற்ற ஜொகூர் அரசாங்கத்தின் அடைவுநிலை (53 விழுக்காடு), தேசிய முன்னணியின் ஆட்சிக்காலத்தைக் காட்டிலும் வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு (60 விழுக்காடு) ஆகியவை காரணங்களாக, சீன சமூகத்தினரின் ஆதரவு மீண்டும் தேசிய முன்னணிக்கே திரும்பியிருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த ஆய்வை சம்பந்தப்பட்ட மையம், கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் மேற்கொண்டுள்ளது. தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியில் பதிவுபெற்றுள்ள பல்லின வாக்காளர்களில், பாலினம், வயது, இடம் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 394 பேரிடம் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

