பொந்தியான், நவ.16-
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற மிகப் பெரிய வெற்றியானது சீன வாக்காளர்கள் மீண்டும் இக்கூட்டணியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதையேக் காட்டுகிறது என்று இதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாகிட் ஹாமிடி தெரிவித்தார்.
“சீன வாக்காளர்கள் தேசிய முன்னணியை மீண்டும் ஆதரிக்கத் தொடங்கிவிட்டதற்கு நல்லதொரு சான்றாக இது அமைந்துள்ளது. தேசிய முன்னணி மக்களோடு தொடர்பு கொண்டிருக்கும் ஒரு கட்சி என்பதை இக்கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளுக்கு எடுத்துக் காட்டியுள்ளது” என்று பொந்தியானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் விவரித்தார்.
எதிர்க்கட்சியை வலுப்பெறச் செய்வதில் அம்னோவுடன் பாஸ் கொண்ட ஒத்துழைப்பையே இது காட்டுகிறது என்றார் ஜாகிட்..
இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ டாக்டர் வீ ஜெக் செங் 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரைத் தோற்கடித்தார்.
இதனிடையே, இந்தத் தோல்வியைத் தொடர்ந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது பதவி விலக வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது இதில் தாம் தலையிடப் போவதில்லை என்றார்.
“இந்த விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், மக்கள் இதனை விரும்புவார்களேயானால் தயவு செய்து விரைவிலேயே இதனைச் செய்யுங்கள்” என்றார் ஜாகிட்.
வாக்காளர்களுக்குக் கடிதம் எழுதியது உட்பட இந்த இடைத் தேர்தலில் டாக்டர் மகாதீரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

